தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து அவரது நெருக்கமான நண்பர் ராஜ் பகதூர் தன் அண்மை பேட்டியில் கூறியுள்ளதாவது…
நானும் ரஜினியும் ஒரே பள்ளியில் படித்து, ஒரே தட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர்கள்.
படித்து முடித்து வேலை செய்யும்போது கூட ஒரே பஸ்ஸில் நான் டிரைவராகவும், ரஜினி கண்டக்டராகவும் பணியாற்றினோம் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறேன்.
பல நாட்கள் இரவு பகலாக நிறைய விஷயங்களை விரிவாக பேசியிருக்கிறோம்.
குறிப்பாக அரசியல் பற்றி நிறைய பேசி இருக்கிறோம்.
கடந்த மே மாதம் சந்தித்தபோது சுமார் 5 மணி நேரம் அரசியல் முடிவு குறித்து பேசினார். தீவிரமான மன நிலையில் ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தார்.
நான் கேட்டபோது, ‘‘ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் போக்கு முற்றிலும் மாறிவிட்டது.
கருணாநிதியும் களத்தில் செயல்படும் நிலையில் இல்லை. தமிழக மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றப்பட வேண்டும். ஏழை எளிய மக்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்’’ என சொன்னார்.
ஒரு கட்டத்தில், ‘‘நான் அரசியலில் வரட்டுமா? உன்னுடைய கருத்தைச் சொல்’’ என்றார். அதற்கு நான், ‘‘என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த ரசிகர்களின் கருத்தும் ஒன்றேதான்.
கண்டிப்பாக நீ (ரஜினி ) அரசியலில் இறங்க வேண்டும். தமிழக மக்களும், ரசிகர்களும் உன்னிடம் (ரஜினி ) அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். நீ (ரஜினி ) எந்த கட்சியிலும் சேராமல், தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்’’ என அவரது கையை பிடித்துக்கொண்டு கூறினேன்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மீண்டும் அதேபோல பேசினார். கட்சி, சின்னம் குறித்து முடிவெடுத்ததாக சொன்னார்.
அரசியல் வருகை குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசினார். இப்போது ரஜினி அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். நிச்சயமாக ரஜினியால் தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் மாற்றம் வரும்.
ஏனென்றால் எனக்கு ரஜினியை நன்றாக தெரியும். அவர் ஒன்றை செய்கிறார் என்றால், அதனைப் பற்றி நன்றாக யோசிக்காமல் முடிவெடுக்க மாட்டார்.
ரஜினி தமிழர்களை ஏமாற்ற மாட்டார். கட்டாயம் தனிக் கட்சி தொடங்கி, தமிழக மக்களுக்கு நல்லது செய்வார்.
ஏழையாக இருந்து முன்னுக்கு வந்தவர் என்பதால் எம்.ஜி.ஆர். மாதிரி ஏழைகளுக்கு நல்லது செய்வார்.
ரஜினியிடம் பேசியதை வைத்து பார்க்கும் போது வறுமையை போக்க நல்ல வழி செய்வார்.
மக்களுக்கு என்ன தேவையோ, பெண்களுக்கு என்ன தேவையோ அதனை உடனடியாக செய்வார். அடுத்தவரின் பணத்துக்கு ஆசைப்படாதவர் என்பதால் கட்டாயம் ஊழல் செய்யமாட்டார். யாருக்கும் கெடுதல் செய்யமாட்டார்.
ரஜினியின் கொள்கை என்ன? கோட்பாடு என்ன? அரசியல் தெரியுமா? பொருளாதாரம் தெரியுமா? பூகோளம் தெரியுமா? என கேட்கிறார்கள்.
அவர்களுக்கு எல்லாம் ஒரே ஒரு பதிலை தருகிறேன்.
எது நல்லது, எது கெட்டது என ரஜினிக்கு தெரியும். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால்,” ரஜினி வழி, தனி வழி தான்” இப்போது சொன்னால் புரியாது. போகப் போக தெரியும். இவ்வாறு ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.
Rajini friend RajBahadur shares about Rajinis Political Entry