தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒன்லைன்.. பிளட் மணி என்றால்… ஒரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கொடுக்கப்படும் தொகையே பிளட் மணி என்பதாகும்.
கதைக்களம்..
தமிழ்நாட்டில் வசிக்கும் கிஷோர் மற்றும் அவரது தம்பி வேலைக்காக அரபு நாடு செல்கின்றனர். அங்கு ஒரு வீட்டில் இருவரும் வேலை செய்கின்றனர். கிஷோருக்கு ஒரு 10 வயது மகள் இருக்கிறார். ஆனால் மனைவி இல்லை.
இவரது மகளை அம்மாவும் அப்பாவும் பார்த்துக் கொள்கின்றனர்.
வெளிநாட்டில் ஒரு சதி திட்டத்தால் ஒரு கொலை வழக்கில் சிக்குகின்றனர் அண்ணன் தம்பி இருவரும். கிட்டத்தட்ட 5 வருடங்கள் சிறையில் இருக்கின்றனர். இறுதியாக அந்த நாட்டு சட்டப்படி அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
நாளை மதியம் தூக்கில் போட இருக்கிறோம் என அந்த நாட்டில் இருந்து கிஷோர் அம்மாவுக்கு போன் கால் வருகிறது.
அம்மா கலெக்டரிடம் முறையிடுகிறார். அங்கு பணிபுரியும் செந்தில் மூலம் அந்த செய்தி பத்திரிகையாளர் பிரியா பவானி சங்கரிடம் வருகிறது.
தூக்கு தண்டனை நிறைவேற ஒரு நாள் அவகாசம் மட்டுமே இருக்கும் நிலையில் பிரியா பவானி சங்கர் மற்றும் அவரது சக ஊழியர் மெட்ரோ சிரிஷ் இருவரும் இணைந்து தூக்கு தண்டனையை தடுக்க போராடுகின்றனர்.
வெளிநாட்டில் உள்ளவர்களை இங்கிருந்து எப்படி காப்பாற்ற முடியும்..? அவர்களை காப்பாற்றினார்களா என்பதை ‘பிளட் மணி’யின் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
செய்தி சேனலில் பணி புரியும் பத்திரிகையாளர்களாக பிரியா பவானி சங்கர், மற்றும் மெட்ரோ சிரிஷ் நடித்துள்ளனர்.
நடிகையாவதற்கு முன்பே புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் தானே பிரியா பவானி சங்கர். எனவே தன் நிஜ வாழ்க்கை அனுபவத்தை தன் கேரக்டரில் அழகாக காட்டியிருக்கிறார்.
அலுவலகத்தில் மற்ற ஊழியர்களால் ஏற்படும் அவமானங்களையும் புரிந்து நடித்திருக்கிறார். இரண்டு அப்பாவி உயிர்களை மீட்க இவர் போராடும் காட்சிகள் மற்றும் இதற்காக தனுஷ்கோடி இலங்கை செல்வது எல்லாம் பரபரப்பான காட்சிகள்.
ஸ்மார்ட்டாக வருகிறார் மெட்ரோ சிரிஷ். முதலில் இவர்தான் பிரியாவுக்கு வில்லனாக இருப்பாரோ என நினைக்க தோன்றுகிறது. பிரியாவுக்கு சரியான ஐடியாக்கள் கொடுக்கும்போது சபாஷ் போட வைக்கிறார். இவருக்கான காட்சிகளை கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கலாம்.
இவர்களுடன் கிஷோர், பஞ்சு சுப்பு, ராட்சசன் வினோத் சாகர், கலைமாமணி ஸ்ரீலேகா ராஜேந்திரன் ஆகியோர் பங்களிப்பு படத்திற்கு ஏற்ற வகையில் உள்ளது. ஒரு கைதியின் எண்ணங்களையும் ஒரு தந்தையின் தவிப்பையும் அழகாக உணர்ந்து நடித்திருக்கிறார் கிஷோர்.
இசையமைப்பாளர் சதிஷ் ரகுநந்தனின் பின்னணி இசையும், ஜி.பாலமுருகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஒரு நாளில் நடக்கும் கதை என்பதால் அடுத்து என்ன நடக்குமோ? என நம்மையும் படத்துடன் ஒன்ற வைத்துவிட்டார் இயக்குனர் சர்ஜுன்.
பிளட் மணி என்ற அம்சத்தை எளிய மக்களுக்கும் புரியும் படியும் அரபு நாட்டு சட்டங்களையும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
சங்கர் தாஸ் எழுதிய திரைக்கதை மற்றும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது.
க்ளைமாக்ஸ் காட்சி சினிமாத்தனமாக உள்ளது. ரசிகர்கள் தவிக்க வேண்டும் என்பதற்காக காட்டிய அந்த காட்சி நம்பும்படி இல்லை. (சொன்னால் ட்விஸ்ட் இருக்காது.. படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..)
ஆக.. இந்த பிளட் மணி… வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சமர்ப்பணம்..
Blood Money movie review and rating in Tamil