தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, நாசர், தன்ஷிகா, தினேஷ், கலையரசன், ஜான் விஜய், வின்ஸ்டன் சவோ, கிஷோர் மற்றும் பலர்.
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : முரளி
படத்தொகுப்பு : பிரவீண் கே.எல்.
இயக்கம் : பா. ரஞ்சித்
பிஆர்ஓ : ரியாஸ் கே அகமது மற்றும் டைமண்ட் பாபு
தயாரிப்பாளர் : கலைப்புலி எஸ் தாணு
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு படங்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும்.
கபாலியில் அந்த எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்து விண்ணைத் தொட்டு விட்டதாக உலகம் முழுவதும் செய்திகள் வெளியாகியுள்ளன.
லிங்கா படத்திற்கு பிறகு கிட்டதட்ட 18 மாதம் கழித்து, ரஜினியை காண ரசிகர்கள் தவம் கிடந்துள்ளனர்.
அவர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்துவிட்டதா என்பதை பார்ப்போம்…
கதைக்களம்…
மலேசியாவில் வசிக்கும் தமிழ் நேசன் (நாசர்) ஒரு நல்ல தலைமுறையை உருவாக்க நினைக்கிறார். இதனை எதிர்க்கும் சிலர் நாசரை கொல்ல, கபாலி (ரஜினி) உருவெடுக்கிறார்.
ஒரு கட்டத்தில் எதிரிகளை இவர் வெட்டி கொல்ல ஜெயிலுக்கு செல்கிறார். எனவே, எதிர்ப்பு இல்லாத 43 என்ற கேங்ஸ்டர் கூட்டம் பெரியளவில் வளர்கிறது.
25 வருடங்களுக்கு பிறகு விடுதலையாகும் கபாலி தன் மக்களுக்கு என்ன செய்கிறார்? என்பதே இப்படத்தின் கதை.
கதாபாத்திரங்கள்…
ரஜினிக்கே உரித்தான மாஸ் தோற்றம். வயதானாலும் அவரது ஸ்டைலில் குறைவில்லை. கண்ணாடி அணிந்திருந்தாலும் அதை மீறியும் அவரது பார்வையில் ஒரு பவர் இருக்கத்தான் செய்கிறது.
ஜெயிலில் இருந்து விடுதலையானதும் நேராக வில்லனின் அடியாளை சந்திக்கும் காட்சிகள் மாஸ். அடி தூள் கிளப்பியிருக்கிறார். பின்னர் மகளுக்காக ஏங்குவதும் மனைவியை தேடி அலைவதும் ரஜினி கண் கலங்க வைக்கிறார்.
ரஜினியின் கருணை இல்ல காட்சிகள் இன்றைய நவீன சமுதாயத்திற்கு தேவை.
ப்ளாஷ்பேக் காட்சியில் நாம் பார்த்து ரசித்த 1980களின் கால ரஜினியை நினைவூட்டுகிறார்.
ரஜினியின் மகளாக தன்ஷிகா பளிச்சிடுகிறார். தந்தையை காப்பாற்ற நினைப்பது முதல் ஒரு ஆண் பிள்ளையாக மாறியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் சாவடி அடித்து அப்ளாஸ் அள்ளுகிறார்.
ரித்விகா கொஞ்சம் நேரம் வருகிறார். அதில் தன் முத்திரை பதிக்க முயற்சித்திருக்கிறார்.
கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் பொருத்தமான தேர்வு. இதுவரை இவர்களை இப்படி பார்த்து இல்லை. ஆனால் ஜான் விஜய்யின் வழக்கமான காமெடி இதில் மிஸ்ஸிங்.
அட்டக்கத்தி தினேஷின் அதிவேக சுறுசுறுப்பு சில சமயம் சிரிப்பை வர வைக்கிறது.
மைம் கோபி, விஜே லிங்கேஷ் ஆகியோர் உருவம் தெரியாத அளவிற்கு மாறி மிரட்டியிருக்கிறார்கள்.
கிஷோர் தன் பாத்திரம் அறிந்து அடக்கி வாசித்திருக்கிறார். ஆனால் டீசரில் பார்த்த அந்த வசனம்.. யாருடா? அந்த கபாலி. வரச்சொல்லுடா என்ற டயலாக் படத்திற்கு வேலையில்லை. கபாலியை நன்றாக தெரிந்தவர் எப்படி அவ்வாறு சொல்ல முடியும். (படத்தில் இது இல்லை என்பதால் ஓகே)
வில்லன் வின்ஸ்டன் சவோ… பேசவே இல்லை. அப்படியே பேசினாலும் தமிழக ஜனங்களுக்கு புரிய போவதில்லை.
நாசருக்கு பெரிதாக வேலையில்லை. ரஜினி படத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தால் யாருக்கு பெரிதாக வேலை இருக்காது. இதிலும் அதேதான்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஜி. முரளியின் ஒளிப்பதிவில் மலேசியா காட்சிகளும் பிரம்மாண்டங்களும் ஓகே. ஆனால் எடிட்டர் பிரவீண் முதல் பாதியை நிறையவே வெட்டியிருக்கலாம்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பின்னணி இசை ஓகே. ஆனால் பாடல்கள் நிச்சயமாக வெகுநாட்களுக்கு மனதில் நிற்காது.
ரஜினியின் இன்ட்ரோ பாடல் போல வரும்… ‘உலகம் ஒருவனுக்கா” தோன்றினாலும் எந்தவிதமான ஆட்டத்தையும் ரசிகர்களிடம் காண முடியவில்லை.
நெருப்புடா பாடல் இடையே இடையே வருவதால் அதையும் முழுமையாக ரசிக்க முடியவில்லை.
படத்தின் ப்ளஸ்…
- ரஜினி ரஜினி ரஜினி – 3 விதமான ரஜினியின் தரிசனம்
- தன்ஷிகா மற்றும் ராதிகா ஆப்தேவின் நடிப்பு
- காந்தி சட்டை போடாததற்கும் அம்பேத்கர் கோட் போட்டதற்கும் அரசியல் இருக்கு.. இதுபோன்ற சில வசனங்கள்
- அடிமைப்படுத்தப்பட்ட தமிழர்களுக்காக ரஜினி பேசும் வசன காட்சிகள் நச்.
- பறவையோட தன்மை பறப்பதுதான்.. பறக்க விடு.. வாழ்வோ? சாவோ? அதை அந்த பறவை தீர்மானிக்கட்டும்’ . (வசனம்)
படத்தின் மைனஸ்…
- இது ரஜினியின் மாஸ் ஆக்ஷன் படமில்லை. அட ரஜினியின் காமெடி கூட இல்லையே.
- மகிழ்ச்சி இருக்கட்டும். அதற்காக வில்லன் கோபமாக பேசினாலும் மகிழ்ச்சியா?
- டான் கதையில் இவ்வளவு சென்டிமெண்ட்ஸ் தேவையா?
- பாடல்கள் வருவதும் போவதும் தெரியவில்லை.
க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதது. ஆனால் ரஞ்சித் அதை முடித்துள்ள விதம் புத்திசாலித்தனம். அதுபோல் இடைவேளை ட்விஸ்ட் ஓகே என்றாலும் அதை யூகிக்க முடிகிறது.
எதற்காக இவ்வளவு பெரிய நட்சத்திர கூட்டத்தை கூட்டியிருக்கிறார் ரஞ்சித் என தெரியவில்லை. ராம்திலக் எதற்காக வருகிறார்? இவரை போலவே நிறைய மலேசிய முகங்கள் வருகிறார்கள்.
ரஜினிக்கென்று எப்பவும் கிராமத்து ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்படம் முழுக்க மலேசியா, கிளப், தாய்லாந்து பார்ட்டி என் இருப்பதால் நிச்சயம் அவர்களை கவராது.
மேலும் வில்லன்கள் மலாய் மொழி பேசிக்கொண்டிருக்கும்போது தமிழில் சப் டைட்டில் போடுவது ஓகேதான். ஆனால் படிக்காதவர்களின் நிலைமை? இது இயக்குனருக்கு தெரியாதா?
பாட்ஷா மாதிரியான ஒரு மாஸ் ஆக்ஷன் இனி வருமா? என தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இது வழக்கமான ரஜினி படம் இல்லை. ரஜினியை வேறு கோணத்தில் பார்க்க நினைப்பவர்களுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.
கபாலி… மகிழ்ச்சி 60%