தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, ராதாரவி, தம்பி ராமைய்யா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, சிங்கம்புலி, யோகிபாபு, ஆடம்ஸ், சரவணா சக்திமணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ்கபூர், தாஸ், நமோநாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தானலட்சுமி, சசிகலா, யமுனா, மணிசந்தனா, மணிமேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
கதைக்களம்..
சென்னையில் மிகப்பெரிய ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார் சசிகுமார். இவருக்கு அடிக்கடி பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. பல காரணங்களால் பெண் கிடைக்காமல் திருமணம் தள்ளிப்போகிறது.
அந்த சமயத்தில் இவரை நம்பி ஒரு பெரிய ப்ராஜக்ட்டை எடுக்கிறார் கம்பெனி முதலாளி ஜெயப்பிரகாஷ்.
இந்த நிலையில் வீட்டு விசேஷத்தில் இருந்து தப்பிக்க நிக்கி கல்ராணியை தன் காதலியாக நடிக்க கேட்கிறார் சசிகுமார். அதற்கு பணமும் கேட்கிறார் நிக்கி.
அதன்படி காதலர்களாக இருவரும் ஊருக்கு செல்கின்றனர். ஆனால் அங்கே இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.
தன் பாசமான குடும்பத்திற்காக கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டாரா சசி.? காதலியாக நடிக்க வந்த நிக்கி என்ன செய்தார்.? ஆபிஸ் ப்ராஜக்ட் முடிக்கப்பட்டதா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
கேரக்டர்கள்..
கிராமத்து கதை என்றாலும் சசிகுமாருக்கு வேஷ்டி சட்டை கொடுக்காமல் ஐடி கம்பெனி ஊழியர் என்பதால் ரேமாண்ட் மாடல் போல ஸ்மார்ட்டா காட்டியிருக்கிறார்கள். இதுதான் மிகப்பெரிய ஆறுதல்
சமுத்திரக்கனி இல்லாத வேலையை இந்த படத்தில் செய்துள்ளார் சசிகுமார். யப்ப்பா இவரே அட்வைஸ் மழை பொழிகிறார். இதில் போதாகுறைக்கு நிக்கி கல்ராணி வேற…
க்ளைமாக்ஸ் சமயத்தில் குடும்ப உறவுகளின் தத்துவம் பேசுகிறார். எல்லாம் சரி தான். ஆனால் அதை அழகாக உணர்வுப்பூர்வமாக
சொல்ல வேண்டாமா? என்னமோ மனப்பாடம் செய்துவிட்டு பேசுவது போல உள்ளது.
இந்த முறை ஆக்சனில் மட்டும் அதிக அக்கறை எடுத்துள்ளார் சசிகுமார். மற்றபடி காதல் காட்சிகளில் சுத்தமாக ஒட்டவில்லை.
நிக்கியை தீடீரென ராதாரவி மகளாக பாவிப்பது நம்பும்படியாக இல்லை.
ராமராஜன் ஸ்டைலில் “செண்பகமே… செண்பகமே…” என்ற பாடலுடன் அறிமுகமாகிறார் யோகிபாபு. ஆனால் காமெடியும் வரலையேப்பா.. சிங்கம் புலி காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
சாம்ஸ், மனோபாலா, தம்பி ராமையா, ராஜ்கபூர், ராதாரவி இருந்தும் சரியாக காமெடிகள் இல்லை. ஒரே காட்சியில் தம்பி ராமையாவின் மீசை பெரிதாக இருக்கிறது. பின்னர் அதுவே சிரியதாக இருக்கிறது. இதை கூடவா உதவி இயக்குனர்கள் கவனிக்கவில்லை.
படத்தின் மைனஸ்…
சசிகுமார் செய்யவுள்ள ப்ராஜக்ட்க்கு 3 மாதங்கள் கொடுக்கப்படுகிறது. பின்னர் நாட்கள் குறைக்கப்படுகிறது. அப்போது 8 மணி நேரம் வேலையை இனி 16 மணி நேரமாக பார்ப்போம் என்கிறார் சசி. அதுவரை தான் ஆபிஸை காட்டுகிறார்கள். அதன்பின்னர் என்னாச்சு..? ஒரு முறை கூட எவருமே ப்ராஜக்ட் செய்வதாக காட்சிகள் இல்லை.
கேட்டால் சசி டீம் லீடர் என்பார்கள். ப்ராஜக்ட்டுக்காக தான் நிக்கியே சசிக்கு ஓகே சொல்கிறார். க்ளைமாக்ஸில் ப்ராஜக்ட் சக்ஸஸ் என காட்டுகிறார்கள். சரி ஆபிஸ் ஒர்க்கை தான் சரியாக காட்டவில்லை. குடும்பத்தையாவது சரியாக காட்டினார்களா? ஒரு காட்சியில் யோகிபாபுவே சிலருக்கு டயலாக் கூட இல்லை என கிண்டல் அடிக்கிறார்.
நிக்கி தான் ஒரு அனாதை என்கிறார். அதுநாள் வரை சசி குடும்பத்துடன் காணப்படும் நிக்கியை மணமேடைக்கு அழைக்கும் வரை யாருமே கூட இருக்கமாட்டார்களா? முகூர்த்த நேரத்தில் தேடுவது போல காட்டுகிறார்கள்..??
ராதாரவியின் 2 மகள்களை யோகிபாபு ஒரே நேரத்தில் மணக்க சம்மதிக்கிறார். ஒரே நேரத்தில் 2 பேரை மணப்பது எப்படி சாத்தியமாகும். சரி அப்படியே இருந்தாலும் அந்த 2 பெண்களை ஒரு காட்சியில் கூட காட்டவில்லை.
சசியின் நண்பர் சதீஷ் ஓரிரு காட்சியில் சிரிக்க வைத்துள்ளார். இப்போது சதீஷ்ம் ஹீரோவாகிவிட்டதால் காமெடி வரவில்லையோ? இவர்களின் நண்பனாக வரும் ஆடம்ஸ் ஏன் படத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. குடித்துவிட்டு மற்றவர்கள் டான்ஸ் ஆடும்போது தனியாகவே நிற்கிறார். ஆனால் அவரை அடிக்கடி காட்டுகிறார்கள். சரி ஏதாவது சொல்ல வருகிறார் இயக்குனர் என்றால் அதுவும் இல்லை.
ஜெயப்பிரகாஷ் மற்றும் ஐடி வில்லன்கள் என பயங்கர பில்டப் கொடுத்துள்ளனர். ஆனால் அவை பெரிதாக எடுப்படவில்லை.
இப்படியாக நிறைய காட்சிகளில் கண்டியூனிட்டி இல்லை.
படத்தில் விஜயகுமார், சுமித்ரா, ரேகா, நிரோஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் உள்ளனர்.
ஊரிலேயே மரியாதையான குடும்பம் என்கிறார்கள். ஆனால் அப்பாவை வாடா போடா என அழைக்கிறார் யோகிபாபு. இவையில்லாமல் நிரோஷாவை அக்னி நட்சத்திரம் என்றும் ரேகாவை ஜெனிஃபர் டீச்சர் என்றும் அழைக்கிறார். (அவர்கள் நடித்த படங்களாக இருந்தாலும்) இது போன்ற டயலாக்குகள் எல்லாம் தேவையே இல்லாத ஆணிகள்.
டெக்னீசியன்கள்..
சில இடங்களில் பின்னணி இசையில் கவனிக்க வைத்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி எஸ். ஆக்சன் காட்சிகள் நன்றாக உள்ளது.
ஒருவேளை இவருக்கு கிராமத்து சாங் செட்டாகவில்லையோ? பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. “மாப்ளே.. மஜா மஜா மாப்ளே…” என்ற பாடல் ரசிக்க வைத்துள்ளது.
சித்தார்த்தின் ஒளிப்பதிவுதான் படத்தை கொஞ்சமாச்சும் காப்பாற்றியுள்ளது எனலாம். சண்டைக் காட்சிகளையும், கிராமத்து காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளார்.
படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் மனதில் ஒட்டும்படியான டயலாக் இல்லை. கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் குடும்பத்தில் அவ்ளோ பேர் இருந்தும் அனைவரின் கேரக்டரும் மனதில் ஒட்டும்படியாக இருக்கும்.
ஏன் சுந்தர் சி படங்களிலும் அப்படிதானே இருக்கும். இப்பட இயக்குனர் கதிர்வேலு அவர்கள் சுந்தரின் உதவியாளராக இருந்தும் அவரின் டச் இவரிடம் இல்லை என்பது வருத்தமே.
ஆக ராஜவம்சம்.. கூஜா துவம்சம் தான்..
Rajavamsam movie review rating