தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த்ரவி, அழகம்பெருமாள், ஜேஎஸ்கே மற்றும் பலர்.
இயக்கம் : ராம்
இசை : யுவன்சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : தேனிஈஸ்வர்
எடிட்டர்: ஸ்ரீகர்பிரசாத்
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்திரா
தயாரிப்பு : ஜேஎஸ்கே (சதீஷ்குமார்)
கதைக்களம்…
நமக்கு பிடித்த ஆண்/பெண் நட்பாக இருந்தால் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காதல் என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டால் அவர் நம்மிடம் மட்டும்தான் பேச வேண்டும் என் ஒரு அதீத பிடிப்பு (Possessiveness) வந்துவிடும்.
அது நம் சந்தோஷத்தை சந்தேகமாக மாற்றிவிடும். அதன் பின்னால் வரும் விளைவுகளை உணர்வுபூர்வமாக உரைக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராம்.
ஒரு மழைக்காக ஒதுங்கும் ஆண்ட்ரியாவும் வசந்த் ரவியும் சந்திக்கின்றனர். பழகுகின்றனர். அதன்பின்னர் அவர்களுக்குள் பரிமாறப்படும் விஷயங்களும் விவாதங்களுமே படத்தின் கதையோட்டம்.
அஞ்சலியை காதலித்து ஏமாற்றப்பட்ட வசந்த்ரவி, கணவனைப் பிரிந்த ஆண்ட்ரியா… இவர்களுக்குள் எழும் காதல், மோதல், ஊடல், என அனைத்தையும் பிரித்து மேய்ந்திருக்கிறார் ராம்.
கேரக்டர்கள்…
ஆண்ட்ரியாவுக்கு இனி இப்படியொரு கேரக்டர் கிடைக்குமா? தெரியாது. எனவே கிடைத்த வாய்ப்பில் சிக்ஸர் அடித்திருக்கிறார். அப்ளாஸை அள்ளிச் செல்கிறார் ஆண்ட்ரியா.
காதலி, அம்மா, ஐ.டி.பணி பெண் என எல்லா தரப்பிலும் நம்மை அசத்தியிருக்கிறார்
அறிமுகநடிகர்தான் என்றாலும் வசந்த்ரவியை பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம். நடிப்பில் நல்ல முதிர்ச்சி.
காதலி போனை கையில் வைத்திருந்தால் சந்தேகம் அதனால் ஏற்படும் கோபம், அதன்பின் பாவம், பரிதாபம் என நன்றாக ஸ்கோர் செய்கிறார்.
சில காட்சிகளிலேயே வந்தாலும் அழகிலும் நடிப்பிலும் நம்மை கவர்கிறார் அஞ்சலி.
ஒற்றைக் காட்சியில் அழகம் பெருமாள் அசத்தல்.
இப்பட தயாரிப்பாளர் ஜேஎஸ்கேவுக்கு போலீஸ் அதிகாரி வேடம். சபாஷ் சதீஷ் சார்.
சிறுவன் ஏட்ரியன் தன் கேரக்டரை சரியாக செய்திருக்கிறார்.
யுவன் மற்றும் நா.முத்துக்குமார் கூட்டணி என்றுமே சோடை போகாது என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம்.
யாரோ உச்சிக்கிளை மேலே, உன் பதில் வேண்டி, ஒரு கோப்பை பாடல்கள் ஆகிய அனைத்தும் ரசிக்கும் ரகம்.
சென்னை மாநகரத்தின் அழகையும் அழுக்கையும், அழுகையையும் என ஒட்டுமொத்தமாக அள்ளி தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.
தேனிஈஸ்வர் என்பதால் என்னவோ, காட்சிகளும் தேன் போன்ற இனிப்பு.
இயக்கம் பற்றிய அலசல்…
’’நீ இனிமே சிகரெட் பிடிக்காதே, ஏன் உனக்கு பிடிக்கத் தெரியலை”, ’’ஒரு பையனுக்கு அம்மா நீ. இனிமே குடிக்காதே….நீயும் உன் அம்மாவுக்கு பையன் தானே” என்ற வசனங்களை பார்த்த பிறகாவது சிகரெட் பிடிப்பவர்கள் திருந்தட்டும்.
படத்தின் காட்சிகள் இடையே ராம் கொடுக்கும் வாய்ஸ் ஓவர் படத்திற்கு ப்ளஸ்.
வசனங்கள் மூலம் விளக்கம் கொடுத்து நம்மை வியக்கவைக்கிறார்.
நன்றாக படித்து வேலைக்கு சென்று ஹைஃபையாக வாழும் பெண்களை இந்த ஆண்களும் சில பெண்களும் ஒரு தவறான கண்ணோத்துடன் பார்க்கின்றனர்.
அதன் தாக்கம் படத்தின் பல இடங்களில் பளிச்சிடுகிறது.
தரமணி… தரமான மணி